கோவை ;ஜீன் 22;

தமிழகத்தை பொறுத்தவரை மோசடிகள் விதவிதமாக அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனால் மோசடி செய்யும் நபர்கள் வெகு சில நாட்களில் பிடிபட்டு விடுவார்கள். அதன்பிறகு அவர்களைப் பற்றிய எந்தத் தகவலும் இருக்காது. இதில் நாசூக்காக மோசடி செய்யும் நபர்கள் இன்னும் சட்டத்தின் பிடியில் சிக்காமல் தண்டனை கிடைக்காமலும் பல உயிர்களை காவு வாங்கியும் இன்னும் பேராசையுடன் சுற்றும் நபர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இவர்களை பொதுவாக ஒயிட் காலர் கிரிமினல் என்று சமூகத்தில் அழைப்பார்கள்.
அப்படி ஒரு ஒயிட் காலர் மோசடி நபர்களை பற்றி தான் இந்த செய்தி . கடந்த சில நாட்களாக பரபரப்பை ஏற்படுத்தி வரும் ராமச்சந்திரன், பாலகிருஷ்ணன் செய்யத் துணிந்து இருக்கும் ஒரு மெகா மோசடி தான் தற்போது கோவையில் பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. கோவை கணபதி அடுத்த சத்தி ரோடு சாலையில் இருந்து வாட்டர் டேங்க் பகுதியில் இருந்து விளாங்குறிச்சி செல்லும் சாலையில் கடந்த 1981 ஆம் ஆண்டு பழனிச்சாமி என்பவர் 2 ஏக்கர் 23 சென்ட் இடத்தை சுஜினி டெக்ஸ்டைல்ஸ் என்ற நிறுவனத்தில் இருந்து வாங்குகிறார். அதன்பிறகு 1987 ஆண்டிற்குள் 50 செணட் ,54 சென்ட், 20 சென்ட் என பலருக்கும் பிரித்து விற்று விடுகிறார். இந்த தகவலை இடத்தை விற்ற பழனிச்சாமியை கோர்ட்டில் அபிடவிட் ஆக கொடுத்துள்ளார். இடத்தையெல்லாம் விற்று முடித்த பழனிச்சாமி மீண்டும் 2006ஆம் ஆண்டு பாலகிருஷ்ணன் என்ற மோசடி ஆசாமிக்கு மீண்டும் கிரையம் செய்து கொடுக்கிறார். காலி இடமாக விற்றதாக கூறியுள்ள அவர்கள் அந்த இடத்தில் மூன்று தொழிற்சாலைகள் ஏற்கனவே இயங்கி வந்ததாக ஒரு வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளனர். இந்த 2 ஏக்கர் 23 சென்ட் நிலத்துக்கு வெறும் 10 லட்சம் ரூபாய் மட்டுமே வாங்கியதாகவும் பழனிச்சாமி கூறியுள்ளார். இடத்தை வாங்கிய ஒரே வாரத்தில் பாலகிருஷ்ணன் 51 பேர் மீது வழக்கு தொடர்ந்தார். இதனால் அந்த நிலத்தின் உண்மையான உரிமையாளர்கள் அதிர்ச்சியானார்.
மோசடியாக வாங்கிய நிலத்தை எப்படிக் கைப்பற்றுவது என திட்டமிட்ட பாலகிருஷ்ணன் ஏற்கனவே பல மோசடிகளை இதேபோல அரங்கேற்றி வரும் செல்வ புரத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் கை கோர்க்கிறார். பணம் ,அதிகாரம், ஆள்பலம் என எல்லாவற்றிலும் பலம்பொருந்திய ராமச்சந்திரன் இது போன்ற வேலைகளை செய்வதில் கில்லாடி. இதையடுத்து ராமச்சந்திரன் தனது தில்லாலங்கடி வேலைகளை செய்யத் தொடங்கினார். மோசடியாக ஆவணங்கள் மூலம் பாலகிருஷ்ணன் வாங்கிய சொத்துக்களை வேறு மோசடியான ஆவணங்கள் மூலம் கைப்பற்ற அனைத்து வேலைகளையும் செய்து வருகிறார். அதன் ஒரு பகுதிதான் கடந்த மாதம் 24 ஆம் தேதி அதிகாலை இரண்டு மணிக்கு விளாங்குறிச்சி சாலையில் உள்ள கார்த்திகேயனுக்கு சொந்தமான இடத்தில் அத்துமீறி புகுந்து சொத்தை அபகரிக்க அடியாட்களுடன் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் களமிறங்கினர். அப்போது அங்கு சென்ற கார்த்திகேயனை 75-க்கும் மேற்பட்டோர் சரமாரியாக தாக்க தொடங்கினர். இதில் காயமடைந்த கார்த்திகேயன் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். அந்த சிசிடிவி காட்சிகள் தமிழகத்தின் அனைத்து ஊடகங்களிலும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து மோசடி ஆசாமிகள் பாலகிருஷ்ணன் ,ராமச்சந்திரன் ஆகிய இருவர் மீதும் சரவணம்பட்டி போலீசார் 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த ராமச்சந்திரன் ஏதோ இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஈடுபட்டவர் அல்ல. கோவையில் போலியாக வாக்காளர் அடையாள அட்டையை தயாரித்து தனது பெயரையே மாற்றி சொத்தை வாங்கியவர். இதேபோல போலியான அறக்கட்டளை அரசியல் தொடர்பு ஆகியவற்றை பயன்படுத்தி அபகரித்த சொத்துக்கள் ஏராளம். இதில் சொத்துக்களை இழந்தவர்கள் ஒருபுறம்… உயிர் இழந்தவர்கள் பலர்… தமிழகத்தின் பல பகுதிகளில் மோசடிகளை அரங்கேற்றி இருக்கும் ராமச்சந்திரன் உள்ளிட்டோர் சட்டத்தின் பிடியில் சிக்கும் நாள் வெகு தொலைவில் இல்லை.இந்த ஒயிட் காலர் கிரிமினல் ராமச்சந்திரன் மீது சட்டப்படி நடவடிக்கை பாயுமா என்பதுதான் சொத்துக்களையும் உயிரையும் இழந்த அப்பாவி பொதுமக்களின் கோரிக்கை ஆகும். நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு பலர் காத்திருக்கிறார்கள்.

Share to your friends.