கோவை. செப்டம்பர். 22-

கோவை, திருப்பூரில் டி.ஆர்.ஓ., அந்தஸ்தில் பணிபுரிந்த அதிகாரிகள், வெவ்வேறு நகரங்களுக்கு மாற்றப்பட்டனர்.கோவை மாவட்டத்தில், கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் பணியாற்றிய அரசு அதிகாரிகள், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும் வெவ்வேறு இடங்களுக்கும் மாற்றப்படுவர் என, எதிர்பார்க்கப்பட்டது. சில நாட்களுக்கு முன், கோவை மாநகராட்சி துணை கமிஷனராக இருந்த விமல்ராஜை, நிர்வாக காரணங்களுக்காக, மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் பணியில் இருந்து விடுவித்தார்.

கட்டாய காத்திருப்போர் பட்டியலில் இருந்த அவர், திருநெல்வேலி சூரிய மின்சக்தி கலன் அமைப்பு சிப்காட் பிரிவுக்கு (நில எடுப்பு) சிறப்பு மாவட்ட வருவாய் அலுவலராக நேற்று நியமிக்கப்பட்டார்.n கோவை மாநகராட்சி துணை கமிஷனராக, தமிழ்நாடு மருத்துவ பணிகள் கழக பொது மேலாளராக பணிபுரிந்த, டாக்டர் ஷர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவை கலெக்டர் அலு வலகத்தில், முத்திரைத்தாள் டி.ஆர்.ஓ.,வாக பணியாற்றிய நர்மதாதேவி, தமிழ்நாடு சிமென்ட் நிறுவன பொது மேலாளராக மாற்றப்பட்டார்.

கோவையில் நில எடுப்பு பிரிவுக்கு தனி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த சாந்தி, மதுரை ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு (கோவில் நிலங்கள்) தனி அலுவலராக நியமிக்கப்பட்டார். அப்பணியில் இருந்த குமரேஸ்வரன், கோவை நில எடுப்பு பிரிவுக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

கோவையில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதன்மை மண்டல மேலாளராக இருந்த பிரசன்னா ராமசாமி, சென்னை பெருநகர மாநகராட்சிக்கு (நிலம் மற்றும் எஸ்டேட்) நியமிக்கப்பட்டார்.

கோவை விமான நிலைய விரிவாக்கம் நில எடுப்பு பிரிவு டி.ஆர்.ஓ., அசோகன், கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை லிட் மேலாண்மை இயக்குனராக மாற்றப்பட்டார்.n திருப்பூரில் தேசிய நெடுஞ்சாலைத்துறை நில எடுப்பு பிரிவு தனி மாவட்ட வருவாய் அலுவலராக இருந்த மதுராந்தகி, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுார் சிப்காட் நில எடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.

இந்த உத்தரவை, தமிழக அரசின் தலைமை செயலாளர் இறையன்பு பிறப்பித்துள்ளார்.

Share to your friends.