கோவை. மே. 21- கோவையில் ஆக்சிசன் தட்டுப்பாடு நிலவுவதை தொடர்ந்து அநேகர் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தொடர்ந்து கோவைக்கு ஆக்ஜி சன் ஏற்றி வந்த எக்ஸ்பிரஸ் கோவையை வந்தடைந்தது. கோவைக்கு, 29.24 டன் திரவ ஆக்சிஜன், ரயிலில் நேற்று முன்தினம் நள்ளிரவு வந்தடைந்தது.கொரோனா தொற்று பரவலின் இரண்டாவது அலை, கோவை மாவட்டத்தில் கடும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மருத்துவமனைகளில் ஆக்சிஜனுக்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
ஒடிசா மாநிலம், ரூர்கேலாவிலிருந்து, 29.24 டன் திரவ ஆக்சிஜன் ஏற்றிய மூன்று டேங்கர் லாரிகள், கடந்த, 18ல், ரயிலில் கோவைக்கு புறப்பட்டன.நேற்று முன்தினம் நள்ளிரவு மதுக்கரை ரயில்வே ஸ்டேஷனை வந்தடைந்தது.தனி டிராக்கில் நிறுத்தப்பட்டு, 50க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள், மாவட்ட வருவாய் அலுவலர் ராமதுரைமுருகன், பாலக்காடு கோட்ட ரயில்வே கூடுதல் மேலாளர் ஷக்கீர் ஹுசேன் மேற்பார்வையில், லாரிகளின் பிணைப்பு சங்கிலிகள் அகற்றப்பட்டன.தொடர்ந்து, துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புடன் லாரிகள், அவ்விடத்திலிருந்து புறப்பட்டன.
அதிகாலை, 3:30 மணிக்கு, சின்னவேடம்பட்டி தனியார் ஆக்சிஜன் தயாரிப்பு நிறுவனத்தை சென்றடைந்தன. பின், திரவ ஆக்சிஜன் முழுவதும் கொள்கலனில் மாற்றப்பட்டது. இப்பணி, காலை, 7:00 மணிக்கு நிறைவடைந்தது.
