கோவை அரசு ஆஸ்பத்திரியில் கோவையை தவிர நீலகிரி , திருப்பூர் உள்பட பிற மாவட்டங்களில் இருந்தும் தினமும் உள்நோயாளிகளாகவும், வெளிநோயாளிகளாகவும்  2 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் இங்கே கொரோனா சிகிச்சை மையமும் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் போதிய நர்சுகள் ஆஸ்பத்திரியில்  இல்லாததால் தற்போது இருக்கும் நர்சுகள்ளே உள் மற்றும் வெளி நோயாளிகளையும், கொரோனா நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது.

இதனால் அவர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி உள்ளனர். கொரோனா முதல் நிலையின்போதே போதிய நர்சுகளை நியமிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டனர். தற்போது கொரோனா 2வது அலை தொடங்கி நாட்டையே உலுக்கி வருகிறது.

கோவையிலும் அதிகபடியான கொரோனா தொற்று ஏற்பட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் நர்சுகளுக்கு மேலும் பணிச்சுமை அதிகரித்துள்ளது. 

எனவே கூடுதல் நர்சுகளை நியமிக்க வேண்டும் என 100க்கும் மேற்பட்ட நர்சுகள் இன்று காலை டீன் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

இதுகுறித்து நர்சுகள் கூறியதாவது:

கோவை அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகள் அதிகம் வருவதால் சுமார் 900 நர்சுகள் தேவைப்படுகிறது. ஆனால் நாங்கள் தற்போது 300 நர்சுகள் தான் பணிபுரிந்து வருகிறோம். இதனால் நாங்களும், நோயாளிகளும் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். கொரோனா மையத்தில் 120 நோயளிகளுக்கு ஒரு நர்சு மட்டுமே உள் ளோம் . தற்போது கொரோனா தொற்று அதிகரித்து 500க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கபட்டுள்ளனர்.

இதனால் நோயாளிகளும்  மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் கொரோனா மையத்திற்கு  தனியாக நர்சுகள் நியமிக்கப்பட்டு உள்ளதால் உள் மற்றும் வெளி நோயாளிகள் கவனிக்க குறைந்த அளவே நர்சுகள் உள்ளனர். எனவே கூடுதல் நர்சுகளை நியமித்து ஆள் பற்றாக்குறையை தீர்க்க அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர். 

இந்த போராட்டத்தால் அரசு ஆஸ்பத்திரி வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Share to your friends.