கோவை. ஏப்ரல். 21- கோவை கோர்ட் ஊழியர்கள், 10 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.கொரோனா தொற்று பரவாமல் தடுக்க, நீதிமன்ற வழக்கு விசாரணையில் கடந்தாண்டில் கடுமையான கட்டுப்பாடு விதிக்கப்பட்டன. குறைந்த அளவிலான வழக்குகள் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டன.
கொரோனா பரவல் குறைந்ததால் ஜன., முதல் கட்டுப்பாடு தளர்த்தப்பட்டு முழு அளவில் விசாரணை நடத்தப்பட்டது. தற்போது, நீதிமன்ற வளாகத்தில் கொரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பல்வேறு நீதிமன்றங்களில் பணியாற்றும், 10 ஊழியர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.கோர்ட்களில் கொரோனா தடுப்பு முறைகளை பின்பற்றாமல் இருப்பதே, பரவலுக்கு காரணமாக கூறப்படுகிறது. அனைவரும் முக கவசம் அணிந்து வந்தாலும், சமூக இடைவெளி பின்பற்றுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.குடும்ப நீதிமன்றம், போக்சோ கோர்ட், வன்கொடுமை வழக்கு கோர்ட் உள்ளிட்ட சில கோர்ட்டில், தினசரி கூட்ட நெரிசல் அதிகமாக காணப்படுகிறது. மக்கள் நடக்க கூட வழியின்றி, கூட்டத்திற்குள் சிக்கி கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
நீதிமன்றங்களில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் வழக்குகளின் எண்ணிக்கை குறைத்தால், கூட்ட நெரிசலை தவிர்த்து, கொரோனாவிலிருந்து தப்பலாம்.

Share to your friends.