கோவை குற்றாலத்தில் இனி வாரநாட்களில் 1000 சுற்றுலா பயணிகளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோவையில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கும் கோவை குற்றாலத்தில் இன்று சித்திரை முதல்நாளை முன்னிட்டு நேற்று அதிக அளவிலான சுற்றுலா பயணிகள் திரண்டனர். ஆனால், கொரோனா பரவலை தடுக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக 1,000 பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இதனால், பலர் திரும்பிச் சென்றனர்.
இதனையடுத்து இனி விடுமுறை நாட்களில் கோவை குற்றாலத்தில் 1,000 பேர் அனுமதிக்கவும், மற்ற வார நாட்களில் தினமும் 750 பேர் வரை அனுமதிக்கவும் வனத்துறை முடிவெடுத்துள்ளது. அதன்படி கோவை குற்றாலத்துக்கு வருபவர்கள் 5 குழுக்களாக தினமும் உள்ளே அனுப்ப திட்டமிட்டுள்ளது. காலை 9 மணி முதல் 10 மணி வரை 150 பேர், அதேபோல காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை, நண்பகல் 12 மணி முதல் 1 மணி வரை, பிற்பகல் 1.30 மணி முதல் 2.30 மணி வரை, பிற்பகல் 3 மணி முதல் 3.30 மணிவரை தலா 150 பேர் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் இதே விடுமுறை நாட்களில் ஒரு பேட்ச்சுக்கு 200 பேர் அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ள வனத்துறை அதிகாரிகள், கோவை குற்றாலத்துக்கு வரும் ஒவ்வொரு சுற்றுலாப் பயணிக்கும் நுழைவுக்கட்டணம் செலுத்தும் முன்பு வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படும் எனவும்,
சுற்றுலா பயணிகள் அனைவரும் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். முக கவசம் இல்லாமல் வருபவர்கள் முககவசத்தை வாங்கி அணிந்து கொண்ட பிறகே உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். சாடிவயலில் இருந்து கோவை குற்றாலம் செல்லும் வாகனத்தில் ஏறும் முன்பு, அங்கேயும் ஒவ்வொரு பயணிக்கும் வெப்பநிலைமானியைக் கொண்டு உடல் வெப்பநிலை பரிசோதனை செய்யப்படுகிறது. பின்பு சானிடைசரைக் கொண்டு கைகளை சுத்தம் செய்து கொண்ட பிறகே சுற்றுலா பயணிகள் வாகனத்தில் ஏற அனுமதிக்கப்படுகின்றனர். கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள சூழலில் தமிழக அரசின் பாதுகாப்பு விதிகளை கடைப்பிடித்து சுற்றுலா பயணிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என வனத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.