கோவை. ஏப்ரல். 7 -தமிழக சட்டசபைக்கு கடைசியாக நடந்த 2016-ம் ஆண்டு நடந்த தேர்தலின்போது 234 தொகுதிகளிலும் 74.15 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. ஆண் வாக்காளர்கள் 74.15 சதவீதம் பேரும், பெண் வாக்காளர்கள் 74. 33 சதவீதம் பேரும் வாக்களித்திருந்தனர். தமிழகத்திலேயே அதிகபட்சமாக தர்மபுரி தொகுதியில் 80 சதவீதம், வாக்குகள் பதிவாகி இருந்தது. மிக மிக குறைவாக சென்னையில் 55 சதவீத வாக்குகள் பதிவானது. இந்த தடவை ஓட்டுப்பதிவு சற்று அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த தேர்தலுடன் ஒப்பிடுகையில் தற்போது சுமார் 2 சதவீத வாக்குகள் குறைந்து பதிவாகி இருக்கிறது. அதாவது இந்த தடவை 72.78 சதவீதம் வாக்குகளே பதிவாகி உள்ளன. ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்து இதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. கொரோனா அச்சுறுத்தல், கோடை வெயில், முறையான பூத் சிலிப் வழங்காதது, பெயர் இல்லை. வெளியூர் பயணம், போன்றவை முக்கிய காரணமாக கருதப்படுகிறது. தமிழகத்தில் நன்றாக குறைந்து வந்த கொரோனா கடந்த இரண்டு வாரங்களாக மிக வேகமாக பரவியபடி உள்ளது. கடந்த 5 நாட்களாக தினசரி பாதிப்பு மூவாயிரத்துக்கும் மேல் ஆக உள்ளது. இதுபலர் வாக்குச்சாவடிகளுக்கு வரவிடாமல் தடுத்துவிட்டது. தமிழகத்தில் அடுத்த மாதம் தான் அக்னி நட்சத்திரம் தொடங்க உள்ளது. ஆனால் இப்போது கடுமையான வெயில் வாட்டி வைத்தபடி உள்ளது. இதன் காரணமாக முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர ஆர்வம் காட்டவில்லை. வெளியூர்களில் பலர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்று விட்டனர். சென்னையில் இருந்து மட்டும் சுமார் 6 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு சென்று உள்ளனர். வழக்கமாக ஒவ்வொரு வாக்காளரும் மிக எளிதாக வாக்களிப்பதற்காக அரசியல் கட்சி பூத் சிலிப் தயார் செய்து கொடுக்கும். தேர்தல் ஆணையம் அதற்கு தடை விதித்தது. தாங்களாகவே பூத் ஸ்லிப் வாங்கியது. ஆனால் அந்த பூத் சிலிப் அனைத்து தொகுதிகளிலும் 100% வெற்றிகரமாக விநியோகிக்கப்படவில்லை. இது போல பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் வாக்காளர்கள் பட்டியலில் பெயர் இல்லை, என்ற குழப்பம் இருந்தது. சென்னையில் ஒரு தொகுதியில் சுமார் இரண்டாயிரம் வாக்குகள் விடுபட்டு இருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்ற பல்வேறு காரணங்களினால் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது என்பது தெரியவந்துள்ளது.

Share to your friends.