கோவை. மார்ச். 27- கோவை போலீஸ் கமிஷனர் கூட்டரங்கில் உளவுத்துறையினர் உடன் கலந்து ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில் உளவுத் துறையினருக்கு வழங்கிய உத்தரவில் டேவிட்சன் தேவஆசீர்வாதம் எந்த கட்சியினருக்கும் உளவுத்துறையினர் ஆதரவாக இருக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தார். கோவை மாநகர போலீஸ் கமிஷனராக டேவிட்சன் ஆசீர்வாதம் நேற்று முன்தினம் பொறுப்பேற்றுக்கொண்டார். இதையடுத்து அவர் நேற்று உளவுத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டத்தில் உளவுத்துறை அதிகாரிகள் எந்த ஒரு அரசியல் கட்சிக்கும் ஆதரவாக நடக்கக்கூடாது. வாக்காளர்களுக்கு கொடுப்பதற்காக பணம் எடுத்துச் செல்வது குறித்து உளவுத்துறையினர் அறிந்து உயர் அதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். மேலும் கோவை மாநகர போலீஸ் துறையில் சட்டம் ஒழுங்கு குற்றப்பிரிவு தலா 15 போலீஸ் ஸ்டேஷன்கள் 3 மகளிர் மற்றும் இரு போக்குவரத்து புலனாய்வு என 35 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. நிர்வாக காரணங்களுக்காக மாநகர போலீஸ் கிழக்கு, மேற்கு, மத்தி, தெற்கு என 4 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இரவுநேர ரோந்துப் பணியில் ஒரு உதவி கமிஷனர் மற்றும் 4 இன்ஸ்பெக்டர்கள் ஈடுபடுவர். இந்நிலையில் இரவு ரோந்து பணியில் மேலும் ஒரு உதவி கமிஷனரை நியமித்து போலீஸ் கமிஷனர் டேவிட்சன் தேவாசீர்வாதம் உத்தரவிட்டுள்ளார். குற்றச் சம்பவங்களைத் தடுக்க இரவுநேர ரோந்துப் பணியை அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.