கோவை. மார்ச். 16- கோவை தொடங்கி மேற்கு மண்டலத்தில் உள்ள முக்கிய மூன்று மாவட்டங்களில் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய விஐபி வேட்பாளர்களின் சொத்து பட்டியல் நேற்று தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்யப்பட்டது.
கோவை:கோவை, நீலகிரி, திருப்பூர் மாவட்டங்களில் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்களில், சொத்து விவரம் வருமாறு தெற்கு தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் நடிகர் கமல் ஹாசன், தனக்கு வீடு, கட்டடம், விவசாய நிலம், வாகனங்கள் என மொத்தம், 177 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிடும் மக்கள் நீதி மைய வேட்பாளர் மகேந்திரன், 170 கோடிக்கு சொத்து இருப்பதாக, பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளார். வீடு, விவசாய நிலம், நகை அனைத்தும் இதில் அடங்கியுள்ளது. சிங்காநல்லுார் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ஜெயராம், தன் பெயரிலும், மனைவி பெயரிலும், 102 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து இருப்பதாக, பிரமாண பத்திரத்தில் தகவல் தெரிவித்துள்ளார். காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர் ராமலிங்கம், தனக்கு, வீடு, விவசாய நிலம், கட்டடம் என்ற வகைகளில், 66 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். மடத்துக்குளம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் எம்.பி., மகேந்திரன், வீடு, நிலம், நகை என அனைத்தும் சேர்த்து, 29.34 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் அ.ம.மு.க., வேட்பாளரான முன்னாள் எம்.பி., சுகுமார், வீடு, நிலம், நகை என அனைத்தும் சேர்ந்து, 23.34 கோடிக்கு சொத்து இருப்பதாக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளார். அவிநாசி தொகுதியில் போட்டியிடும் சபாநாயகர் தனபால், தன் பெயரிலும், மனைவி பெயரிலும், அசையும் சொத்துக்கள், அசையா சொத்துக்கள் என்ற வகைகளில், மொத்தம் 9.40 கோடி ரூபாய்க்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பா.ஜ., வேட்பாளர் வானதி குடும்பத்தினருக்கு 9.28 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்துக்கள் இருப்பதாக தெரிவித்துள்ளார். பல்லடம் தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளரான முன்னாள் அமைச்சர் ஆனந்தன், தனக்கு வீடு, நிலம், நகை ஆகிய வகைகளில் 8.79 கோடி ரூபாய் மதிப்புக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.*தொண்டாமுத்துார் தொகுதியில் போட்டியிடும் அமைச்சர் வேலுமணி, தன் பெயரிலும், மனைவி பெயரிலும், 5.60 கோடியே ஒரு லட்சம் ரூபாய் மதிப்புக்கு சொத்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

Share to your friends.