நன்றி நீதியரசர் ஐயா அவர்களுக்கு

உளநோய் மருத்துவரும், உளவியலின் உளப்பகுப்பாய்வுச் சிந்தனை முறையை நிறுவியவருமான
சிக்மண்ட் ஃப்ராய்ட்
“உடலுக்கு எப்படி உடற்பயிற்சியோ அதுபோல மனதுக்குப் பயிற்சி புத்தக வாசிப்பு”
என்று அறிவுறுத்தி உள்ளார்.

“புரட்சிப் பாதையில் கைத்துப்பாக்கிகளைவிட
பெரிய ஆயுதங்கள் புத்தகங்களே”
என்று பறைசாற்றுகிறார்
புரட்சியாளர் லெனின்.

“போதும் என்று நொந்துபோய், புதுவாழ்வைத் தேடுகிறீர்களா…
ஒரு புதிய புத்தகத்தை வாங்கி வாசிக்கத் தொடங்குங்கள்”
என்று வழிகாட்டுகிறார்
தத்துவப் மேதை இங்கர்சால்.

ஈரானின் மிகச்சிறந்த மன்னர் என்று போற்றப்படும் காசிம் இஸ்மாயில் என்ற அரசர், 342 ஒட்டகங்களில் புத்தகங்களை ஏற்றிக்கொண்டு சென்று படித்தவர் என்று வரலாறு பதிவு செய்கிறது.

புத்தகம் வாசிக்கிற பழக்கம் வாய்ப்பது அற்புதமான வரம்,
அதனை வளர்க்க வேண்டும்.

நம் குழந்தைகளுக்கு புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும்.

விடுமுறையை புத்தக வாசிப்போடும் கொண்டாடப் பழக்க வேண்டும்.

புத்தகம் வாசிப்பது பற்றிய இரண்டு கதை சுருக்கங்கள்.

கல்வினோ எழுதிய ’A general in the library’ கதையை முதலில் பார்ப்போம்.

ஒரு சர்வாதிகாரி தன் நான்கு தளபதிகளை அணியோடும் படையோடும் அந்நகரத்தின் பெரிய நூலகத்துக்கு அனுப்புகிறான்.

அந்த நூலகத்தில் இருக்கும் எந்த புத்தகங்கள் தேவையானவை எந்த புத்தங்கள் தேவையில்லாதவை என்று வாசித்து சென்சார் செய்து ரிப்போர்ட் கொடுப்பதுதான் அவர்கள் வேலை.

ஒவ்வொரு நூலாகப் படிக்கிறார்கள். படித்து மாளவில்லை.

படைவீரர்கள் கேட்கிறார்கள் “நாங்க சும்மாதானே காவலுக்கு நிற்கிறோம். எங்களுக்கும் புத்தகம் கொடுங்க. நாங்களும் படித்து சென்சார் செய்ய உதவுறோம்” என்கிறார்கள். வேலை அதிகமிருந்ததால் தளபதிகள் அதை ஏற்றுக் கொள்கிறார்கள்.

படிக்கிறார்கள் படிக்கிறார்கள் படித்துக் கொண்டே இருக்கிறார்கள்.

குறிப்பிட்ட மாதங்களாகியும் நூலகத்திற்கு உள்ளே சென்றவர்கள் வெளியே வரக்காணோம். சர்வாதிகாரி உத்தரவிட்டு வெளியே வலுக்கட்டாயமாக அழைத்து வருகிறார்.

வெளியே வந்தால் நான்கு தளபதிகளுக்கு சர்வாதிகாரியை பிடிக்காமல் போகிறது. உள்ளே அவர்கள் வாசித்த புத்தகங்கள் வாழ்க்கை பற்றிய அவர்கள் பார்வையையே மாற்றிவிட்டது.

அவர்கள் சர்வாதிகாரியை எதிர்க்கிறார்கள். நான்கு தளபதிகளின் பதவிகள் பறிக்கப்படுகின்றன.

அவர்கள் மீண்டும் நூலகத்துக்கு ஆவலாக செல்வதாக கதை முடிகிறது.

இரண்டாவதாக:-

ரஷ்ய எழுத்தாளர்
ஆண்டன் செகாவ் எழுதிய ‘The Bet’ என்ற சிறுகதையின்
சுருக்கம்.

ஒரு பணக்காரனுக்கும் வக்கீலுக்கும் இடையே பந்தயம் ஒன்று உருவாகிறது.

15 ஆண்டுகள் ஒரு அறையில் அடைபட்டு இருப்பது சாத்தியமா? என்ற பந்தயம்தான் அது. வக்கீல் சாத்தியம் என்கிறான்.

பணக்காரன் சாத்தியமில்லை என்கிறான்.

“நீ பதினைந்து வருடங்கள் மனிதர்களிடம் பேசாமல் ஒற்றை அறையில் அடைபட்டு இருந்தால் உனக்கு இரண்டு மில்லியன் பணம்தருகிறேன்” என்கிறான் பணக்காரன்.

பந்தயம் தொடங்குகிறது.

வக்கீல் சிறைபடுகிறான்.

முதல் வருடம் வக்கீலுக்கு மன அழுத்தமாக இருக்கிறது. தனக்கு வேண்டியதை வாங்கிச் சாப்பிடுகிறான். வைனாக குடிக்கிறான். பியானோ வாசிக்கிறான். என்ன செய்ய என்று தெரியவில்லை.

பின் புத்தகம் வாசிக்க ஆரம்பிக்கிறான்.

முதல் கட்டமாக காதல் நாவல்கள். அடுத்ததாக இன்னும் அழமான புத்தகங்கள். அடுத்ததாக பல்வேறு மொழிகள், பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் என்று பதினைந்து வருடங்களாக வாசிக்கிறான். வாசித்துக் கொண்டே இருக்கிறான்.

இப்போது பணக்காரனுக்கு பயம் வருகிறது.பந்தயம் முடிய இன்னும் ஒருநாள்தான் இருக்கிறது .

தோற்றுவிட்டால் இரண்டு மில்லியன் காலி.

வக்கீலை கொன்று விட்டால் என்ன? என்று. யோசிக்கிறான். தன்னிடம் இருக்கும் சாவியை எடுத்துக்கொண்டு வக்கீல் அறையை திறக்கிறான்.

அங்கே மெலிந்த தேகமாய் வக்கீல் தூங்கிக்கொண்டிருக்கிறான். இவனை தலையணையை வைத்து அமுக்கிக் கொள்ளலாம் என்று நினைக்கும் போது வக்கீல் பணக்காரனுக்கு எழுதி வைத்திருக்கும் கடிதம் பார்வையில் படுகிறது.

அக்கடிதத்தில் புத்தகங்கள் மூலம் தான் இவ்வுலகை பார்த்துக் கொண்டிருந்த்தாகவும் தனக்கு பணம் வேண்டாம் என்றும் புத்தக வாசிப்பின் மூலம் தனது மனம் வேறு தளத்துக்குச் சென்றுவிட்டதாகவும் பணம் ஒரு பொருட்டே இல்லை என்றும் தானே பந்தயத்தில் தோற்று விடுவதாகவும் எழுதியிருந்தது.

மறுநாள், பணக்காரனிடம் வாட்ச்மேன் வந்து பந்தயம் முடிய ஐந்து மணி நேரம் இருக்கும் போது வக்கீல் தப்பித்து பந்தயத்தில் தோற்று ஓடிவிட்டதாகச் சொல்ல
பணக்காரன் தவிப்பதாக கதை முடிகிறது.

ஆம்,
நல்ல புத்தகங்கள் நமது வாழ்க்கையின் அர்த்தத்தை புரிய வைக்கும்.
வாசிக்கிற பழக்கம் வாழ்க்கையின் அழகாக்கும்.

வாசிக்கத் தொடங்குவோம்
நம் குழந்தைகளையும்
வாசிக்கப் பழக்குவோம்

வாசிக்கத் தொடங்கினால்
வானம் வசப்படும்.

வாழ்த்துக்கள்.

அன்புடன்,
அ. முகமது ஜியாவுதீன்.

Share to your friends.