கோவை. பிப்ரவரி. 23- நாளை மறுநாள் 25-ஆம் தேதி பாரதப் பிரதமர் மோடி கோவை வருகிறார். அரசு நலத்திட்ட உதவிகளை தொடக்கி வைத்து பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார். அதற்காக விமானம் மூலம் 4 குண்டு துளைக்காத கார்கள் வந்து இறங்கின. கோவையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் கண்காணிப்பு பணியிலும் ஈடுபட்டு வருகின்றனர். விடிய விடிய போலீசார் சோதனை செய்து வருகின்றனர். அதனால் கோவை எப்பொழுதும் பரபரப்பாக காணப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி வருகிற 25-ஆம் தேதி கோவைக்கு வருகிறார். அதற்காக 7:45 டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் புறப்படும் பிரதமர் மோடி 10:25 சென்னை வந்து அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் புதுச்சேரி செல்கிறார். புதுச்சேரியில் பல்வேறு நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு மீண்டும் 2.10 மணிக்கு சென்னை வருகிறார். அங்கிருந்து தனி விமானம் மூலம் பிற்பகல் 3 35 மணிக்கு கோவை விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வருகிறார். அங்கு ஏராளமான பாஜகவினர் திரண்டு வந்த பிரதமரை வரவேற்கிறார்கள். அதனை தொடர்ந்து கார் மூலம் கொடிசியா அரங்குக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்று நெய்வேலி லிக்னைட் நிறுவனம், மத்திய கப்பல் போக்குவரத்து, மின்சாரம், தமிழக அரசின் குடிசை மாற்று வாரியம் நகராட்சி நிர்வாகம் ஆகிய துறைகளில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். மேலும் முடிவுற்ற திட்டப் பணிகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சிகள் முடிந்ததும் மாலை 5 மணி அளவில் காரில் கொடிசியா அரங்கிற்கு அருகே உள்ள மைதானத்துக்குச் செல்லும் பிரதமர் அங்கு பாரதிய ஜனதா சார்பில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்று சிறப்புரை ஆற்றுகிறார். இந்த கூட்டத்தில் பாஜகவின் முக்கிய தலைவர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். பொதுக் கூட்டம் முடிந்ததும் கோவை விமான நிலையம் செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி சென்றடைகிறார்.

பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு கொடிசியா மைதானத்தில் மேடை அமைக்கும் பணி போலீஸ் பாதுகாப்புடன் நடந்து வருகிறது. கொடிசியா அரங்கம் மற்றும் கொடிசியா மைதானம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். மோடியின் வருகையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து போலீசார் பாதுகாப்பு பணிக்கு வர உள்ளனர். பாதுகாப்பு பணியில் 17 எஸ்.பி.28 கூடுகளில் ஸ்.பி.கள் 48 டி.எஸ்.பிக்கள் உட்பட 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதுதவிர பிரதமரின் இரண்டு நிகழ்ச்சிகளும் கொடிசியா அரங்கம் மற்றும் மைதானத்தில் நடப்பதால் அந்த பகுதி முழுவதும் போலீஸ் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. இதற்காக கொடிசியா நுழைவு வாயிலின் முன்பு மினிகன்ட்ரோல் ரூம் போலீசார் அமைத்துள்ளனர்.
இதுதவிர பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் முழுவதும் கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. பிரதமரின் பாதுகாப்பு பணிக்கு வரும் அனைத்து போலீசாரும் மினி கண்ட்ரோல் ரூமில் பதிவு செய்து வருகின்றனர். இந்த நிலையில் பிரதமரின் பாதுகாப்புக்காக டெல்லியிலிருந்து இந்திய விமானப்படை விமானத்தில் சிறப்பு பாதுகாப்பு படை கமாண்டோக்கள் எஸ்.பி.ஜி 30 பேர் கோவை வந்துள்ளனர். அவர்களுடன் பிரதமர் மோடி பயணிப்பதற்காக குண்டு துளைக்காத கார்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. 4 கார்களும் அரசு விருந்தினர் மாளிகையில் நிறுத்தி வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கோவை மாநகர் முழுவதும் எங்கு பார்த்தாலும் போலீசார் மற்றும் சோதனைகளும் நடந்து வருகிறது.
