கோயம்புத்தூர் சாய்சிட்டி ரோட்டரி கிளப் மற்றும் காக்னிஜென்ட் இணைந்து கிராமப்புற சமுதாய பள்ளிகளுக்கு 1000 கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கியது.
கோயம்புத்தூர், பிப்ரவரி 22, 2021 – இந்த உலகை வாழ்வதற்கு ஏற்ற நல்ல உலகமாக மாற்றி அமைக்க தேவையான அறிவை பெறவும், திறமையை வளர்த்துக் கொள்ளவும், மேம்படுத்தவும் ஆரம்பமாவது கல்வி பெறுவதில் தான் துவங்குகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மட்டுமின்றி, தற்போதைய தொற்று காலத்திலும் கம்ப்யூட்டரின் அவசியம், முக்கியத்துவம் பெற்று வருகிறது. தற்போதைய குழந்தைகளுக்கு இ வகுப்புகள் இனி வரும் காலங்களில் அவசியமாகும். குழந்தைகள் தான் வருங்கால வலிமையான தேசத்தின் அடிப்படை.
ரோட்டரி கிளப் ஆப் கோயம்புத்தூர் சாய்சிட்டி, தகவல் தொழில்நுட்ப முன்னோடியான காக்னிஜென்ட் உடன் இணைந்து, கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 152 கிராமப்புற பள்ளிகளில் படித்து வரும் 1000 குழந்தைகளுக்கு கம்ப்யூட்டர்களை இலவசமாக வழங்கியது.
இதுகுறித்து காக்னிஜென்ட் கோவை மையத்தின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் திருமதி. மாயா ஸ்ரீகுமார் கூறுகையில், கோவிட் 19 தொற்று பாதிப்பால், டிஜிட்டல் கல்வி துரதிர்ஷ்டவசமாக அனைவருக்கும் சீராக கிடைக்கவில்லை. நீண்ட கால ஊரடங்காலும், சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டிய நிலையிலும், ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் வசதிகள் பல கிராமப்புற பள்ளிகளில் இல்லை. தற்போது அளிக்கும் கம்ப்யூட்டர் நன்கொடை, பல பள்ளிகளுக்கு கல்வி அளிக்க உதவும். சமுதாய முன்னேற்றத்துக்கும் மாற்றத்துக்கும் கல்வி மிக அவசியம் என எண்ணிய நாங்கள், டிஜிட்டல் வழி கல்வியை தொடரவும், கல்வியில் இதை சேர்க்கவும், புதிய தொழில்நுட்பத்தை பகிரவும் இது துவக்கமாக அமைந்துள்ளது. இந்த திட்டத்தை செயல்படுத்த உதவியாக இருந்த மாநில, மாவட்ட மற்றும் ஊள்ளூர் நிர்வாகத்திற்கும், இணைந்து செயலாற்றும் கோயம்புத்தூர் சாய்சிட்டி ரோட்டரி கிளப்பிற்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம், என்றார்.
அனைத்து வகுப்புகளுக்குமான தமிழ்நாடு பாடநூல்களை ஆராய்ந்து, தேவையானவற்றை அளிக்கும் விதமாக இ புத்தகங்கள் நிறுவப்பட்டுள்ளன. இவற்றுக்கு தேவையான திட்டங்களும் புகுத்தப்பட்டுள்ளன. இந்த கம்ப்யூட்டர்கள் அனைத்தும், தேவையான பள்ளிகளுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளன. 152 பள்ளிகளுக்கு 1000 கம்ப்யூட்டர்களை வழங்கியதன் மூலம் 82000 மாணவர்கள் பயன்பெறுவர். இந்த பள்ளிகளில் 25 பள்ளிகளை காக்னிஜென்ட் தேர்வு செய்து, கல்வி கற்கும் முறைகள், ஆர்வத்தையும், ஒழுக்கத்தையும் மாணவர்களிடையே மேம்படுத்தவும், கல்விசாரா செயல்பாடுகளை ஊக்கப்படுத்தவும் இணைந்து செயலாற்றவுள்ளது. இந்த பள்ளிகளில் அடிப்படை கட்டமைப்பு வசதிகளும் மேம்படுத்தப்படும். ஆரம்ப கல்வி முதல் மேல்நிலை கல்வி வரை உள்ள அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க அழைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மற்றும் கோவை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பயன்பெறுவர்.
ரோட்டரி மாவட்ட கவர்னர் 3201 மற்றும் கோயம்புத்தூர் சாய்சிட்டி ரோட்டரி கிளப் திட்ட தலைவர் கோபிநாத் ஆகியோர் கூறுகையில், நமது வாழ்க்கை மாற்றத்துக்கு, தொற்று காலம் நமக்கு ஒரு கற்கும் அனுபவத்தையும், செயல்பாட்டினையும் அளித்துள்ளது. கிராமப்புற ஏழை எளிய மாணவர்கள், தொற்று கால பாதிப்புகளிலிருந்து விடுபட காக்னிஜென்ட் சிறப்பாக செயல்பட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது, என்றார்.
கோயம்புத்தூர் சாய்சிட்டி ரோட்டரி கிளப் திட்ட தலைவர் கோபிநாத் மேலும் கூறுகையில், சென்ற ஆண்டு 200 பேருக்கு வழங்கினோம்; இந்த ஆண்டு 1000 பேருக்கு வழங்குகிறோம். காக்னிஜென்ட் நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது போலவே, பிற நிறுவனங்களும் இது போன்ற திட்டங்களுக்கு உதவ முன்வர வேண்டும். பயனாளிகளை நேரடியாகவும், சரியாகவும் சென்றடைய இது ஒரு சிறந்த வழியாக உள்ளது. உலகம் டிஜிட்டல் யுகத்தை நோக்கி சென்று கொண்டுள்ளது. நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும், என்றார்.
கோயம்புத்தூர் சாய்சிட்டி ரோட்டரி கிளப் திட்டத் தலைவர் கோபிநாத் அருணாச்சலம், தலைவர் எஸ்பி சண்முகசுந்தரம் மற்றும் செயலாளர் கே. தேவராஜ் ஆகியோரின் மேற்பார்வையில் 152 பள்ளிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. ரோட்டரி கவர்னர் 3201 எம். ஜோஸ் சாக்கோ, சேஷையர் ஹோம்ஸ் தலைவர் ஜிஆர் கோவிந்தராஜன், காக்னிஜென்ட் கோவை மைய தலைவர் மற்றும் துணைத்தலைவர் மாயா ஸ்ரீகுமார் ஆகியோர் முன்னிலையில் இன்று காலை 9.00 மணிக்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் கோவை பீளமேடு சேஷையர் ஹோமில், 600 கம்ப்யூட்டர்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதை தொடர்ந்து காலை 11.00 மணிக்கு மீதமுள்ள 400 கம்ப்யூட்டர்கள், திருப்பூர் அவினாசி பாளையத்தில் உள்ள ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில் வழங்கப்பட்டது.
ரோட்டரி 3201 மாவட்ட கவர்னர் எம்.ஜோஸ் சாக்கோ, காக்னிஜென்ட் கோவை மைய தலைவர் மற்றும் துணைத்தலைவர் மாயா ஸ்ரீகுமார், திருப்பூர் கல்வி மாவட்ட அதிகாரி ஆர்.ரமேஷ் ஆகியோர் நிகழ்வில் பங்கேற்றனர். மேலும், இதில் மாவட்ட இயக்குனர் ஆர்.எஸ் மாருதி, உதவி கவனர் கே.ஐ ஜான்சன், ஜி.ஜிஆர் வள்ளி எஸ் கனகராஜ், சமுதாய சேவகர் பி.பி லக்ஷ்மண், ரோட்டரி தொழில் சேவை மாவட்ட தலைவர் வரதராஜன், மாவட்ட முன்னுரிமை இளைஞரணி தலைவர் முருகன், ஜெய்ஸ்ரீராம் பொறியியல் கல்லூரியின் துணைத்தலைவர் டி.கே கருப்பண்ணசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கல்லூரியின் முதல்வர் எம்.விஜயக்குமார் நன்றி கூறினார்.

Share to your friends.