கோவை அருகே இலவசமாக மதுபானம் கேட்டு கும்பல் ஒன்று மதுபானக் கூடத்தில் பணியாற்றும் ஊழியர்களை தாக்கியதோடு மதுபான கூடத்தை சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
கோவை மலுமிச்சம்பட்டி பகுதியில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இதனருகில் அனுமதி பெற்ற மதுபான கூடம் ஒன்றும் செயல்பட்டு வரும் நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு மதுபானம்கூடத்திற்கு வந்த கும்பல் ஒன்று இலவசமாக மதுபாட்டில் கேட்டதாக கூறப்படுகிறது.. இதனை அடுத்து பார் உரிமையாளர் தனது நண்பரான வாலிபர் ஒருவரை அழைத்த நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த வாலிபர் மதுபானம் கேட்டு தகராறில் ஈடுபட்ட கும்பலை தாக்கியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கும்பல் மதுபானக் கூடத்தில் இருந்த பொருட்களை உடைத்து மதுபானக் கூடத்தில் பணியாற்றும் பணியாளர்களை தாக்கி சென்றனர். இதில் காயமடைந்த மதுபான கூட பணியாளர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே மதுபானக் கூடத்தை ஒரு கும்பல் சூறையாடிய சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக வழக்கு ஏதும் பதிவு செய்யப்படாத நிலையில் வீடியோ வைரலாகி வருவதனால் செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்