கோவை. பிப்ரவரி. 10- கோவையில் புரோட்டாவுக்கு கூடுதலாக குருமா கேட்ட திமுக நிர்வாகியை அடித்து கொலை செய்யப்பட்டார். இதைதொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஓட்டல் உரிமையாளர் மற்றும் புரோட்டா மாஸ்டர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:- கோவை சூலூர், அருகே உள்ள முத்து கவுண்டன் புதூர், இங்குள்ள பட்டத்தரசி அம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது 37), பெயிண்டர். இந்தப் பகுதியில் உள்ள திமுக கிளை தலைவராகவும் இருந்தார்.இவருக்கு மனைவி 2 குழந்தைகள் உள்ளனர். நேற்று வேலை முடிந்து வந்த ஆரோக்கியராஜ் குடும்பத்துடன் சிறிது நேரம் பேசி மகிழ்ந்தார். நேரமாகி விட்டதால் இன்று இரவு ஓட்டலில் புரோட்டா வாங்கி சாப்பிடலாம் என்று மனைவி மற்றும் குழந்தைகள் கேட்டனர். அதற்கு சம்மதம் தெரிவித்து ஆரோக்கியராஜ் அருகில் உள்ள கரிகாலன் என்பவரது ஓட்டலுக்கு சென்றார். அங்கு தேவையான புரோட்டா கட்டி கொடுத்தார். அப்போது குருமா குறைந்த அளவிலேயே உள்ளது. சாப்பிடுவதற்கு இது போதாது இன்னும் கொஞ்சம் வேண்டும் என்று ஆரோக்கியராஜ் கேட்டார். நீங்கள் கொடுத்த பணத்துக்கு தகுந்தவாறு கொடுத்துள்ளேன் இதற்கு மேல் கொடுக்க முடியாது என கடை உரிமையாளர் கூறினார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அதில் வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியது. அப்போது அங்கிருந்த புரோட்டா மாஸ்டர் கருப்பசாமி, ஓட்டல் உரிமையாளரின் நண்பர் முத்து ஆகிய மூன்று பேரும் சேர்ந்து ஆரோக்கியராஜ் அடித்து உதைத்தனர். ஆரோக்கியராஜ் மயங்கி விழுந்தார். இதை பார்த்த அங்கிருந்த பொதுமக்கள் ஆரோக்கியராசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலமாக சூலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார். திமுக பிரமுகர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுகவினர் நள்ளிரவு அங்கு திரண்டு கொலையாளிகளை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். இதுகுறித்து சூலூர் இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டியன் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தார். இந்த நிலையில் ஓட்டல் உரிமையாளர் கரிகாலன் மற்றும் மாஸ்டர் கருப்பசாமி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர். கொலையில் தொடர்புடைய கரிகாலனின் நண்பர் முத்து என்பவரை தேடி வருகிறார்கள்.

Share to your friends.