

ரூபாய் 250 செலுத்தினால் வீட்டிற்கே பழநி பஞ்சாமிர்தம் அனுப்பி வைக்கப்படும் என தமிழக அரசின் அறநிலையத் துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் அளித்த அறிக்கையில், இந்து சமய அறநிலைதுறை சார்பாக பக்தர்களின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையிலான அம்மாவின் அரசு செய்து வருகின்றது. பக்தர்களின் வேண்டுகோளுக்கிணங்க பழநி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயில் பிரசித்திபெற்ற பஞ்சாமிருதம் தபால் மூலம் பக்தர்களுக்கு அனுப்பி வைக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
கோவிலுக்கு வர இயலாத சூழ்நிலையில் உள்ள மக்கள் பயனடையும் வகையில், பிரசாதத்தினை அவர்களின் இல்லத்திற்கு கொண்டு செல்லும் நடைமுறையினை அறிமுகப்படுத்தும் விதமாக, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலின் பிரசித்தி பெற்ற பிரசாதமான அரை கிலோ எடை கொண்ட பஞ்சாமிர்தம், திருக்கோயில் மூலம் இயற்கையாக தயார் செய்யும் விபூதி 10 கிராம், 6 க்கு 4 இஞ்ச் அளவிலான தண்டாயுதபாணி சுவாமி படம் அஞ்சலகங்கள் மூலம் ரூபாய் 250 கட்டணம் செலுத்தினால் பக்தர்கள் இல்லத்திற்கு சென்று அடையும் திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.