கோவை பிப்ரவரி. 4 – கோவையில் கல்லூரி படிப்பை முடித்த பிறகு அரியர் எக்ஸாம் எழுதுவதற்காக கோவை வந்திருந்த 2 மாணவர்கள் இன்று அதிகாலை ரயிலில் அடிபட்டு உடல் துண்டாகி பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து ரயில்வே போலீசார் கூறியதாவது:- திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிவா (வயது 22), இவருடைய நண்பர் திருவாரூரைச் சேர்ந்தவர் பவித்திரன் (வயது 22). இவர்கள் இருவரும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு எஸ்.சி.எஸ் கல்லூரியில் ஆர்க்கிடெக்ட் படிப்பு படித்து வந்தனர். தற்சமயம் இவர்களுக்கு அரியர் தேர்வு நடைபெற்று வருகிறது. அதற்காக கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு கோவை பீளமேடு தண்ணீர்பந்தல் பகுதியில் ஒரு அறையில் தங்கினார். இன்று அதிகாலை தண்ணீர்பந்தல் பகுதியில் உள்ள தண்டவாள பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கோவை நோக்கி வந்த ப்ளூ மவுண்டன் எக்ஸ்பிரஸ் ரயில் மோதியதில் இவர்கள் உடல் துண்டாகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். அந்த பகுதியில் அதிகாலை வாக்கிங் சென்றவர்கள் மாணவர்களின் உடல்களை பார்த்துவிட்டு கோவை சென்ட்ரல் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இரண்டு உடல்களையும் கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று அதிகாலை 2 மாணவர்கள் ரயிலில் அடிபட்டு இறந்த சம்பவம் அந்தப் பகுதியில் மாணவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

Share to your friends.