ஒவ்வொரு டாஸ்மாக் கடைகளிலும் பாட்டிலுக்கு அதிகமாக ஐந்து ரூபாய் முதல் 20 ரூபாய் வசூல் செய்கின்றனர் இந்த வசூல் செய்யும் தொகை நாளொன்றுக்கு 20 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ரூபாயை தாண்டும் என்கின்றனர் தகவல் அறிந்தவர்கள் இந்த வசூல் பணம் யாரிடம் செல்கிறது இது குறித்தான ஒரு அலசல்

கோவை அருகே உள்ள டாஸ்மாக் மதுபானக் கடையில் அரசு நிர்ணயித்த மதுபாட்டில்களை அதிக விலைக்கு விற்றதாக விற்பனையாளர் மற்றும் உதவியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி உட்கோட்டம், செட்டிபாளையம் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட ஈச்சனாரியிலிருந்து எல்.என்.டி.பைபாஸ் செல்லும் வழியில் அரசு மதுபான கடை உள்ளது. இந்தக் கடையில் சூப்பர்வைசராக பணிபுரியும் வினோத் என்பவர் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு புகார் அளித்திருந்தார்.
புகார் மனுவில், `நான் சூப்பர்வைசராக பணியாற்றும் கடையில் தொடர்ந்து அரசு நிர்ணயம் செய்யப்பட்ட விலைக்கு மேலாக மது பாட்டில்களை விற்று வருகின்றனர்’ என்று கூறியிருந்தார்.இதைத்தொடர்ந்து நேற்று 10 மணி அளவில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீரென அந்தக் கடையில் சோதனை செய்தனர். அதில் கணக்கில் வராத 70 ஆயிரம் ரூபாய் பணம் மீட்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து அங்கு பணியிலிருந்த சேல்ஸ்மேன் லெனின், பார் உதவியாளர் சரவணன் ஆகியோரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் அரசு நிர்ணயித்த மதுபான திற்கும் மேலாக கூடுதல் விலைக்கு விற்பனை செய்து தினம்தோறும் லட்சக்கணக்கில் பணம் ஈட்டுவது தெரியவந்தது.
இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்று அதிகாலை அவர்கள் இருவரையும் கைது செய்து பொள்ளாச்சி சிறையில் அடைத்தனர். குடிமக்கள் கோரிக்கைகளாக வைத்து வந்த இந்தப் புகாரை கடையின் சூப்பர்வைசர் புகார் அளித்ததன்பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்ட சம்பவம் குடிமக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இனிமேலாவது டாஸ்மாக் மதுபான கடைகளில் அரசு நிர்ணயித்த விலையிலேயே வியாபாரம் செய்வார்களா பார்க்கலாம்.

Share to your friends.