கோவை
கோயம்புத்தூர் மாவட்டம், குனியமுத்தூர் மற்றும் சுந்தராபுரத்தில் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் கோவை மாவட்டத்திற்காக செயல்படுத்தப்பட்ட அதிமுக அரசின் திட்டங்கள், மற்றும் முடிவுற்ற நலத்திட்டப் பணிகள் ஆகியவற்றை குறித்து முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி இன்று பேசினார்
குனியமுத்தூர் மற்றும் சுந்தரராஜபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டங்களில் முதலமைச்சர் பழனிசாமி பேசியபோது: எம்.ஜி.ஆர் 10.5 ஆண்டுகள் மற்றும் ஜெயலலிதா 15.5 ஆண்டுகள்,அம்மாவின் அரசு 4 ஆண்டுகள், என மொத்தம் அண்ணா திமுக அரசு 30 ஆண்டுகள் தமிழகத்தில் ஆட்சி புரிந்து, மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை செயல்படுத்தி உள்ளது.
30 ஆண்டு காலம் அண்ணா திமுக ஆட்சியில் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பதோடு, இந்தியாவில் தமிழகம் முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
இந்தியாவிலேயே தமிழகம் தான் அமைதிப் பூங்காவாக விளங்கி கொண்டிருக்கிறது. சிறுபான்மையின மக்கள் பாதுகாப்பாக வாழ உகந்த மாநிலம் தமிழ்நாடு. இந்த மக்களுக்கு அரணாக தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கும். ஆனால் திரு. ஸ்டாலின் அவர்கள் திட்டமிட்டு ஒரு பொய்யான தோற்றத்தை உருவாக்கி திமுக தான் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தி வருகிறார்.
அதிமுக அரசை பொறுத்தவரை, இந்த மண்ணில் பிறந்த அனைவரையும் காப்பாற்றுவது தான் எங்களது லட்சியம். திமுக ஒரு அராஜக கட்சி. திமுக ஆட்சிக்கு வந்தால் இந்தப் பகுதியில் இருக்கும் உங்களுடைய நிலம் உங்களுக்கு சொந்தமாக இருக்காது. அவர்களுக்கு சொந்தமாக மாறிவிடும்.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது, சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் என்று மாண்புமிகு ஆளுநர் அவர்கள் கூறினார்கள். அப்போது சட்டமன்றத்தில் வாக்கெடுப்பு நடந்தது. என்ன அட்டூழியங்கள் நடந்தது தெரியுமா, மேஜை மேல் ஏறி டான்ஸ் ஆடினார்கள். சட்டம் இயற்றுகின்ற மாமன்றத்தில் எதிர்கட்சி தலைவராக இருக்கின்ற ஸ்டாலின் அவருடைய சட்டமன்ற உறுப்பினர்கள் எல்லாம் சட்டமன்றத்தில் மேஜை மீது ஏறி டான்ஸ் ஆடுகிறார்கள். அதற்கும் மேலாக புனிதமான சட்டப்பேரவை தலைவரை அவருடைய இருக்கையிலிருந்து இழுத்து, திமுக எம்எல்ஏக்கள் அமர்ந்தார்கள். நீதிமன்ற நீதிபதிகளின் இருக்கைக்கு சமமாக கருதப்படும் பேரவை தலைவர் இருக்கையில் அமர்ந்து திமுகவினர் அராஜகம் செய்தனர். இவ்வளவு அராஜகம் செய்கின்றவர்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டு மக்கள் நிம்மதியாக வாழ முடியுமா.1989ஆம் ஆண்டு நான் சேவல் சின்னத்தில் வெற்றி பெற்று அம்மாவுடன் சட்டமன்ற உறுப்பினராக இருந்தேன். அப்போது ஜெயலலிதா எதிர்கட்சி தலைவராக இருந்தார்கள். கருணாநிதி தமிழகத்தின் முதலமைச்சராக இருந்தார்.ஜெயலலிதா சட்டமன்றத்தில் எழுந்து பேசுகின்ற போது, திமுகவினர் புத்தகத்தை தூக்கி மீது எறிந்தார்கள்.கடுமையாக தாக்கினார்கள். திமுக அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும் முடியை பிடித்து இழுத்தார்கள். யார் முன்னால், திமுக தலைவர் முதலமைச்சர் கருணாநிதி முன்னால். ஒரு முதலமைச்சர் கண் எதிரே எதிர்கட்சி தலைவர் ஒரு பெண் என்றும் பாராமல் சட்டமன்றத்திலே இப்படிப்பட்ட அட்டூழியம் நடக்கின்றது என்று சொன்னால் நாட்டில் இருக்கின்ற பெண்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்கின்றது. எதிர்க்கட்சி தலைவருக்கே இப்படிப்பட்ட நிலைமை அன்று . எனவே, திமுக ஆட்சிக்கு வந்தால் எப்படி இருக்கும் என்று எண்ணிப் பாருங்கள்.
நான் முதலமைச்சராக பொறுப்பேற்ற போது கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வந்து ரயில் தட்டுப்பாட்டை பேக்கினோம். இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர், உள்ளாட்சி அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிர்வாக திறமையால் குடிநீர் தட்டுப்பாட்டை சமாளித்தோம். ஸ்டாலின் உள்ளாட்சித் துறையில் தவறு நடப்பதாக கூறுகிறார். வாருங்கள் நீங்களும் நானும் நேருக்கு நேர் சந்திப்போம். என்ன தவறு நடந்திருக்கிறது என்று கூறுங்கள், நாங்கள் அதற்கு பதில் சொல்ல தயாராக இருக்கிறோம். ஆனால் துண்டு சீட்டு இல்லாமல் வரவேண்டும்.
அண்மையில் ஸ்டாலின் ஆளுநர் அவர்களை சந்தித்து அமைச்சர்கள் மீது பொய்யான குற்றச்சாட்டு அறிக்கையை கொடுத்தார். ஆனால் திமுக முன்னாள் அமைச்சர்களான ஐ. பெரியசாமி மீது 9 வழக்குகள், பொன்முடி மீது 3 வழக்குகள்,கே.என். நேரு மீது 2 வழக்குகள், துரைமுருகன் மீது 2 வழக்குகள், எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் மீது 2 வழக்குகள், சுப. தங்கவேலன், தா.மோ. அன்பரசன், சுரேஷ் ராஜன், தமிழரசி, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு,அனிதா ராதாகிருஷ்ணன், ரகுபதி ஆகியோர் மீது தலா 1 வழக்கு நடந்து கொண்டிருக்கிறது. அதை மறைப்பதற்காக பொய்யான அறிக்கையை ஸ்டாலின் ஆளுநர் அவர்களிடம் கொடுத்து, மக்களை குழப்பி கொண்டிருக்கிறார். இந்தியாவிலேயே ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஒரே ஆட்சி திமுக ஆட்சி தான். அதனால் அண்ணா திமுக மீது குறை சொல்ல ஸ்டாலினுக்கு எந்த தகுதியும் இல்லை.
உள்ளாட்சித் துறை அமைச்சர் அவர்கள் 100-க்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வாங்கியுள்ளார்கள். ஆனால் ஸ்டாலின் அவர்கள் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த போது எந்த விருதையும் வாங்கவில்லை. உள்ளாட்சித் துறையை கவனித்தால் தானே விருதுகளை வாங்க முடியும். அவருக்கு நாட்டில் என்ன நடக்கிறது என்பதே தெரியாது. ஆனால் நமது உள்ளாட்சித் துறை அமைச்சர் சிறப்பாக செயல்பட்ட காரணத்தினாலே தேசிய அளவில் 100-க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்று தந்தவர்.
சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முதன்மையான அரசு எங்களுடைய அரசு. இந்தியாவிலேயே அமைதிப் பூங்காவாக விளங்கும் மாநிலம் தமிழ்நாடு. இங்கு எந்த சமுதாயத்திற்கும் எந்த இடையூறும் கிடையாது. இந்தியா டுடே நாளிதழ் இந்தியா முழுவதும் சர்வே செய்து தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்று விருது வழங்கியுள்ளது.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியிலே மின்சாரம் எப்போது வரும், எப்போது போகும் என்றே தெரியாது. மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டனர்.ஜெயலலிதா 2011ம் ஆண்டு முதலமைச்சராகப் பொறுப்பேற்கும் பொழுது, தமிழ்நாட்டை மூன்றாண்டுகளில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக உருவாக்குவேன் என வாக்குறுதி அளித்தார்கள். அதன்படியே மின் மிகை மாநிலமாக தமிழ்நாட்டை மாற்றிக் காட்டினார்கள்.
தொழில் துறையைப் பொறுத்தவரையில் அம்மாவின் அரசு 2019 ஜனவரி மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தி சுமார் ரூ.3,05,000 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து 304 தொழில் நிறுவனங்கள் வர நடவடிக்கை மேற்கொண்டது. இதன்மூலம் சுமார் 10 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். அதே போல, சோதனையான கொரோனா தொற்று காலத்தில் கூட இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் ரூ.60,000 கோடி தொழில் முதலீட்டை ஈர்த்து 74 புதிய தொழில் நிறுவனங்கள் வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 1.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இன்றைக்கு இந்தியாவிலேயே தொழில் தொடங்க உகந்த மாநிலம் தமிழகம் தான் என்று முடிவுசெய்து தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வருகின்றனர்.
முன்பு திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் கேரளாவை பாருங்கள், டெல்லியை பாருங்கள் அங்கெல்லாம் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி கட்டுப்படுத்த தவறிவிட்டார் என்று குற்றம் சாட்டினார். ஆனால் இன்று நிலை என்ன. தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் நாள் ஒன்றுக்கு 8,000 நபர்கள் முதல் 10,000 நபர்கள் வரை இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்படுகின்றார்கள். அங்கிருக்கும் மக்கள் தொகை தமிழகத்தை ஒப்பிடும்போது பாதிதான். டெல்லி ஒரு சிறிய மாநிலம் அந்த மாநிலத்தில் ஒரு நாளைக்கு 5,000 நபர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் தமிழகத்தில் தற்போது கொரோனா தொற்று 500-க்கும் கீழ் உள்ளது.
பாரத பிரதமருடன் காணொலி காட்சி மூலமாக முதலமைச்சர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாரத பிரதமர் உரையாற்றும்போது தமிழ்நாட்டில் கொரோனா தொற்றுநோய் மிகச் சிறப்பாக கட்டுப்பட்டுத்தப்பட்டுள்ளது, இதனையே அனைத்து மாநிலங்களும் பின்பற்ற வேண்டும் என்று பாராட்டினார்கள். ஒரு நாளைக்கு 70 ஆயிரத்திற்கும் அதிகமான ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் தமிழ்நாட்டில் செய்யப்படுகிறது. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் ஆர்.டி.பி.சி.ஆர். டெஸ்ட் செய்யப்பட்டு கொரோனா தொற்று நோய் சிறப்பான முறையில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அரசு எந்த அளவிற்கு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கின்றது என்பதை எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
கொரோனா காலக்கட்டத்தில் பொதுமக்கள் சிரமப்படக் கூடாது என்பதற்காக கடந்த 8 மாதங்களாக மக்களுக்கு விலையில்லா அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற பொருட்களை கொடுத்த ஒரே அரசு, இந்தியாவிலேயே எங்களுடைய அரசு தான். திமுக ஆட்சியில் ஒரு மாதமாவது ரேஷன் கடைகளில் இலவசமாக பொருட்களை கொடுத்தார்களா.
தைப் பொங்கலை ஏழை எளிய மக்கள் சிறப்பாக கொண்டாட வேண்டும் என்பதற்காக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் அரசு தலா 2500 ரூபாய் மற்றும் பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. சோதனையான காலத்தில் மக்களுக்கு உதவிட வேண்டும் என்ற நோக்கில் அரசு 2500 ரூபாய் வழங்கியது. அதைக்கூட பொறுக்க முடியாமல் அதை தடுத்திட ஸ்டாலின் திமுக நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். நாட்டு மக்களுக்கு நன்மை செய்கின்ற அரசு அண்ணா திமுக அரசு.
ஏழை, எளிய மக்கள் அவர்கள் வசிக்கின்ற பகுதிகளிலேயே மருத்துவ சிகிச்சை பெற வேண்டும் என்பதற்காக 2000 அம்மா மினி கிளினிக்குகள் திறக்கப்படும் என்று அரசால் அறிவிக்கப்பட்டது. கோயம்புத்தூர் மாவட்டத்தில் மட்டும் 70 அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. இந்த மின் கிளினிக்கில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு மருத்துவ பணியாளர் அந்த பகுதியிலேயே பொதுமக்களுக்கு சிகிச்சை அளிக்கின்றனர்.
திமுக மத்தியில் 13 வருடங்கள் ஆட்சி அதிகாரத்தில் இருந்தீர்கள். அப்பொழுது தமிழ்நாட்டு மக்களுக்காக ஏதாவது திட்டங்கள் கொண்டு வந்தீர்களா, காவேரி பிரச்சனை தீர்க்கப்பட்டதா, இல்லை. கருணாநிதி டெல்லி செல்லும் போது எல்லாம் குடும்ப நலனுக்காகவே சென்றார். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு மத்திய மந்திரி சபையில் வலுவான இலாக்காவை பெறுவதற்காகவும், சிறையில் இருக்கும் அவரது மகள் கனிமொழியை பார்க்கவோ தான் சென்றார், மக்களுக்காக செல்லவில்லை. திமுக ஒரு வாரிசு கட்சி. வாரிசு அரசியல் அங்கு நடைபெறுகிறது. திரு. கருணாநிதி, அவரது மகன் ஸ்டாலின், அதற்கு பிறகு தற்போது அவரது மகன் உதயநிதி. சாமான்ய மக்கள் அங்கே வளர முடியாது. ஆனால் அண்ணா திமுக அப்படியல்ல. என்னைப் போன்ற சாமான்ய விவசாயும் ஒரு மாநிலத்தின் முதலமைச்சராக வர முடியும்.
அடிக்கடி ஸ்டாலின் அவர்கள் நான் கலைஞர் மகன் என்று கூறி வருகிறார். அதில் என்ன சந்தேகம். இவர் கலைஞர் மகன் தான். ஆனால் இவர் மட்டும் கலைஞர் மகன் கிடையாது. கலைஞருக்கு பல மகன்கள் இருக்கிறார்கள். அதில் இவர் ஒருவர். மதுரையிலும் கலைஞர் மகனான மு.க. அழகிரி அவர்கள் இருக்கிறார். அவர் தற்போது கட்சி தொடங்க உள்ளதாக செய்தி வருகிறது. அவர் கட்சி தொடங்கினால் திமுக நிச்சயம் உடையும். எங்கள் கட்சியை உடைக்க பார்த்தீர்கள். வினை விதைத்தவன், வினை அறுப்பான், அதுபோல தற்போது உங்கள் கட்சி தான் உடைய போகிறது.
கிணத்துக்கடவு தொகுதியில் 307 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மலுச்சம்பட்டி, அண்ணா நகர், மலை நகர், வில்லலூர், கோவைபுதூர் மற்றும் திருவிக நகர் ஆகிய பகுதிகளில் 6368 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டுள்ளது.
47 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேரூர் செட்டிப்பாளையம் ஊராட்சியில் கோவை மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் ஒன்றிய வளாகத்தில் தானியங்கி பால் பதப்படுத்தும் புதிய பால் பண்ணையை அமைத்துக் கொடுத்திருக்கின்றோம்.
பேரூர் செட்டிப்பாளையம், வெள்ளலூர், மலுச்சம்பட்டி ஆகிய இடங்களில் அம்மா மினி கிளினிக் அமைத்து தரப்பட்டுள்ளது. கோவை மாவட்டத்தில் 83,172 முதியவர்களுக்கும், 2,817 ஆதரவற்ற பெண்களுக்கும், 3,792 முதிர் கன்னிகளுக்கும், 9,535 விதவைகளுக்கும், 2,009 ஆதரவற்ற விதவைகளுக்கும், 12,720 மாற்றுத்திறனாளிகளுக்கும், என மொத்தம் 1,14,045 நபர்களுக்கு அம்மாவுடைய அரசு மாதந்தோறும் உதவித்தொகை வழங்கி சாதனை படைத்து வருகிறது.
போத்தனூர் ரயில்வே நிலையம் அருகில் ரயில்வே கடவிற்கு குறுக்கே 32 கோடி ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம், ஈச்சனாரியில் 18 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ரயில்வே மேம்பாலம்,
கோவை பொள்ளாச்சி நான்கு வழிச் சாலைகள் 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நடைபெற்று வருகிறது.
6.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் காவல் கண்காணிப்பாளர் அலுவலகம். 2.25 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வட்டாட்சியர் அலுவலகம், 17.19 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 24 சாலைப் பணிகள் போன்ற பல திட்டங்கள் இந்த மாவட்டத்திற்கு தந்துள்ளோம். வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் மக்களாகிய நீங்கள் உங்களது பொன்னான வாக்குகளை இரட்டை இலை சின்னத்திற்கு அளித்து பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்து அம்மாவின் ஆட்சி தொடர துணை நிற்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு, முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமி குனியமுத்தூர் மற்றும் சுந்தராபுரம் தேர்தல் பிரச்சாரக்கூட்டத்தில் உரையாற்றினார்.
