10 தொகுதி விவசாயிகள் அதிருப்தி
தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய அணை கீழ்பவானி அணை. இதன் மூலம் ஈரோடு, திருப்பூர், கரூர் மாவட்டகளில் 2.5 லட்சம் ஏக்கர் பாசனம் பெறுகின்றன. நடப்பு ஆண்டில் இரண்டாம் பாகம் கடலைச் சாகுபடிக்கு ஜனவரி மாதம் 7ஆம் தேதி அறிவித்தபடி தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் வழக்கத்துக்கு மாறாக இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் மழை பொழிந்து கொண்டிருக்கிறது. இதைக் காரணம் காட்டி கடலை சாகுபடிக்கு முதல் நினைப்பிற்கு தண்ணீர் தேவையில்லை, பொழிந்திருக்கும் மழை நீர் ஈரமே போதுமானது. ஆகவே முதல் நினைப்பிற்கான நீரை அணையில் சேமித்து அதை வரும் மே மாதம் 10ஆம் தேதிக்கு மேல் விடப்பட்டால் அது கோடை காலத் தேவைக்கு கைகொடுக்கும்.
இது தொடர்பாக ஜனவரி 7ஆம் தேதி ஈரோடு வந்திருந்த முதல்வரிடம் மனு கொடுக்கப்பட்டது. இதன் நகல்கள் ஈரோடு மாவட்ட ஆட்சியருக்கும், பொதுப்பணித்துறை கண்காணிப்பு பொறியாளருக்கும் அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அரசு பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. ஏழாம் தேதி திறக்கப்பட்ட நீர் தொடர்ந்து இன்றுவரை பயன்பாடு இல்லாமல் கால்வாயில் சென்று கொண்டிருக்கிறது. மேலும் ஏற்கனவே பொழிந்து வரும் மழையால் ஏற்பட்டிருக்கும் அறுவடைக்குத் தயாரான நெல் பாதிப்பை, இது அதிகரித்திருக்கிறது. மழைநீர் ஈரம் காய்ந்தால் தான், உழவு ஓட்டி கடலைப் பருப்பு சால் விட முடியும். விடப்பட்டிருக்கும் நீர், ஈரம் காய்வதை மேலும் தாமதப்படுத்திக் கொண்டிருக்கின்றது. மொத்தத்தில் பொழியும் மழையைக் கணக்கில் கொள்ளாமல் விடப்பட்டிருக்கும் இந்த நீரால் நெல் அறுவடையும், கடலை விதைப்பும் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
பாசனம் பெறும் 10 தொகுதி பயனாளிகள் இடையே இது அரசின் மீது பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி இருக்கின்றது. பொதுப்பணித்துறையை நிர்வகித்து வரும் முதல்வர், இதில் தனிக்கவனம் செலுத்தி உடனடியாக தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பாசனப் பயனாளிகளின் எதிர்பார்ப்பு.