கோவை அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலை மூடைகள் பறிமுதல். 3 லட்ச ரூபாய் மதிப்பு. 2 பேர் கைது. கோவை. டிசம்பர். 16- கோவை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ஏற்றிவந்த மாருதி காரில் 300 கிலோ புகையிலை பொருட்கள் கடத்தி வந்த இருவர் கைது. ஒருவர் தப்பி ஓட்டம். கோவை கருமத்தம்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அரவிந்தராஜ் தலைமையிலான போலீஸ் குழு நேற்று கருமத்தம்பட்டி பிருந்தாவன் நகர் டி.என்.எஸ்.டி..சி டிப்போ அருகில் உள்ள சர்வீஸ் ரோட்டில் சோதனை செய்துகொண்டிருந்தனர். அப்போது ஒரு மாருதி ஸ்விப்ட் கார் அதிவேகமாக வந்தது. அதனை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதில் மூன்று பேர் இருந்தனர். ஒருவர் போலீசை பார்த்ததும் தப்பி ஓடிவிட்டார். 2 பேரை கைது செய்து விசாரணை செய்தனர். அதில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜிஜேந்திர குமார் (வயது 24), அவர் தற்சமயம் சோமனூர் கருமத்தம்பட்டி பகுதியில் வசித்து வருகிறார். மற்றவர் தர்வேஷ் (வயது 35), மேட்டுப்பாளையம் டவர் ஆபீஸ் ரோட்டில் வசித்து வருகிறார். தப்பி ஓடியவர் பெயர் மோதிலால். காரை பறிமுதல் செய்து சோதனை செய்ததில் காரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களான கூலிப், ஹான்ஸ், கணேஷ், பான்பராக் உட்பட புகையிலைப் பொருட்கள் 300 கிலோ 10 மூட்டைகளில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மொத்த மதிப்பு 3 லட்ச ரூபாய் ஆகும். கைது செய்யப்பட்ட இருவரிடம் தப்பி ஓடியவர் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இவர்கள் பொருட்களை மொத்த குடோனில் இருந்து எடுத்து வந்து கடைகளுக்கு விற்பனை செய்வதற்காக கொண்டு வந்தது விசாரணையில் தெரியவந்தது. கார் மற்றும் புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

Share to your friends.