கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த எஸ் பி வேலுமணி கூறியதாவது :- கோவையில் 50 ஆண்டுகளில் இல்லாத வளர்ச்சியை கடந்த 5 ஆண்டுகளில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்துள்ளார் என தெரிவித்தார். கோவையில் முக்கிய சாலைகள் அனைத்தும் விரிவுபடுத்தப்பட்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்க மேம்பாலங்கள் கட்டப்பட்டு வருகிறது எனவும், அதிமுக அரசு கோவையில் 5 புதிய கல்லூரிகளை துவக்கி உள்ளது எனவும் அத்திக்கடவு அவினாசி திட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது எனவும் தெரிவித்தார். பீளமேடு பகுதியில் உள்ள சிறப்பு பொருளாதார மண்டலத்தில் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு ஏற்ற வகையில் பார்க்கிங் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் 2.42 ஏக்கர் பரப்பளவில் 114.16 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டிடத்துக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார் எனவும் தெரிவித்தார். இதன் மூலம் சுமார் 20 ஆயிரம் பேர் நேரடியாகவும், 40 ஆயிரம் பேர் மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெறுவார்கள் என்றார். இதன்மூலம் தகவல் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் பெங்களூரு, சென்னை உள்ளிட்ட நகரங்களின் வரிசையில் கோவையும்பங்கு வகிக்கும் என நம்பிக்கை தெரிவித்தார். திமுகவின் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள கனிமொழிக்கு கோவை குறித்து எதுவும் தெரியாது என தெரிவித்த அமைச்சர், பிரச்சாரத்தின்போது திமுகவினர் எழுதிக் கொடுத்ததை அவர் பேசி வருவதாக விமர்சித்தார். சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் உள்ளதுபோல கோவைக்கு மெட்ரோ ரயில் திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் கோவையின் நீண்டகாலத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். ராணுவத் தளவாடங்கள் தொழில் பூங்கா அமைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது எனவும் தொழில் பூங்கா வந்தால்தான் பல்லாயிரக்கணக்கான அவருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் தெரிவித்தார். கொங்கு மண்டலம் மட்டும் அல்லாமல் டெல்டா மாவட்டங்கள் உட்பட அனைத்துப் பகுதிகளிலும் முதலமைச்சருக்கு ஆதரவு பெருகி வருகிறது என தெரிவித்தார். ஐபேக் நிறுவனம் சொல்வதைக் கேட்டு கனிமொழியும், திமுகவினரும் செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.

Share to your friends.