சாந்தி கியர்ஸ் நிறுவனர் சுப்பிரமணியனின் மறைவிற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்குச் சேவையாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த 1996 ம் ஆண்டு சாந்தி சோசியல் சர்வீஸ் என்ற அமைப்பினை சுப்பிரமணியம் துவங்கினார். அந்த அமைப்பின் அறங்காவலராகவும் இருந்து கொண்டு, லாப நோக்கமின்றி, சேவை மனப்பான்மையுடன் உணவகம், மருத்துவமனை, மருந்தகம் போன்றவற்றைக் கடந்த 24 ஆண்டுகளாக நடத்தி வந்தார்.

78 வயதான சுப்பிரமணியம் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவரது மறைவிற்கு பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “கோவை மாவட்டத்தில் ஏழை எளிய மக்களுக்குக் குறைந்த விலையில் உணவு,மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு சமூக சேவைகளில் இறுதி வரை தன்னை அர்ப்பணித்துக் கொண்டவர், தன்னலமற்ற சேவகர் ‘சாந்தி சமூக அறக்கட்டளை’ நிறுவனர் திரு.சுப்பிரமணியன். அண்ணாரின் மறைவு செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் கோவை பகுதி மக்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” எனத் தெரிவித்துள்ளார்

Share to your friends.